search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிபோதையில் தகராறு"

    அறந்தாங்கி அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தையை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா நாகுடி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, அவருடைய மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். அதேபோல் அவர் கடந்த 14-ந் தேதி வீட்டில் மனைவி மற்றும் மகள்களிடம் தகராறு செய்துள்ளார்.

    மேலும் அவர்களை, அவர் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்கு வந்த அவருடைய 17 வயது மகன், எதற்காக எனது தங்கைகள் மற்றும் தாயை அடித்து விரட்டுகிறீர்கள் என்று தந்தையிடம் கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து, மகனை அடிக்க பாய்ந்தார். அப்போது மகன் கட்டையை பறித்து, தந்தையின் தலையில் அடித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்டவரின் மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தகராறு செய்த தந்தையை, மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விராலிமலை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா தேராவூர் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரி மகன் குமார்(வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு கோமதி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். கணவன், மனைவி இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. 

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த குமார், கோமதியுடன் தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த கோமதி வீட்டில் கிடந்த அரளைக்கல்லை தூக்கி குமாரின் தலை மீது போட்டார். இதில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மீது மனைவி அரளைக்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    குடிபோதையில் தகராறில் டிரைவரை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த பம்மலை சேர்ந்தவர் மணிகண்டன் (38). டிரைவர். நேற்று இரவு மணிகண்டன் குடித்துவிட்டு நாகல்கேணி பகுதியில் வந்து கொண்டு இருந்தார். அப்போது குடிபோதையில் வந்த மற்றொரு வாலிபருடன் தகராறு ஏற்பட்டது.

    வாய்தகராறு கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் அருகில் உள்ள காய்கறி கடையில் இருந்தகத்தியை எடுத்து வந்து மணிகண்டனை சரமாரியாக குத்தினார். இதில் அவர் உயிர் இழந்தார்.

    சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். விசாரணையில் நாகல்கேணி பகுதியை சேர்ந்த அருள்ராஜ் (37) என்பவர் இந்த கொலையை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் இருந்த போது மணிகண்டன் தன்னை தாக்கியதால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து வாலிபர் அருள்ராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கோவை அருகே குடிபோதையில் தகராறு செய்த தம்பியை குழவி கல்லால் தாக்கி கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை தெலுங்குபாளையம் அருகே உள்ள பாரதி வீதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 36). கட்டிட தொழிலாளி. இவரது சகோதரர் சவுந்தர்ராஜன் (30). வேலைக்கு செல்லும் இவர் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தார். பலமுறை குடிபழக்கத்தை கைவிடுமாறு சுந்தர்ராஜன் கூறியும் சவுந்தர்ராஜன் கேட்கவில்லை.

    சம்பவத்தன்றும் சவுதர் ராஜன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் தனது அண்ணனிடம் தகராறு செய்தார். இதனை அண்ணனின் மனைவி தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சவுந்தர்ராஜன் அவரை தரக்குறைவாக பேசினார். தனது மனைவியை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரம் அடைந்த சுந்தர்ராஜன் வீட்டில் இருந்த குழவி கல்லை எடுத்து சவுந்தர் ராஜனின் தலையில் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் சுந்தர்ராஜன் செல்வபுரம் போலீசில் சரணடைந்தார்.

    உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட சவுந்தர்ராஜனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பியை கொன்ற சுந்தர்ராஜனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    வாகன சோதனையின் போது சப்-இன்ஸ்பெக்டரிடம் குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    கோவை ராதாகிருஷ்ணன் ரோடு ஆம்னி பஸ் நிலையம் அருகே காட்டூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த வாலிபர் எனக்கு முக்கிய பிரமுகர்களை தெரியும் என கூறி தகராறு செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மக்கள் கூட்டம் கூடியது. அங்கு இருந்தவர்கள் இந்த காட்சியை தங்களது செல்போன்களில் போட்டோ, வீடியோ எடுத்து சமூக வளை தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த காட்சி வேகமாக பரவியது.

    இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். உடனடியாக ரத்தினபுரி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தகராறு செய்த வாலிபரை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கல்வீரம் பாளையத்தை சேர்ந்த ஜெகதீசன் என்பவரது மகன் சுதர்சன் (வயது 28) என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து ரத்தினபுரி போலீசார் இவர் மீது அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×